Tuesday 19 July 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 02)


.
ஜிஹாதின் அர்த்தங்கள்
(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

"ஜிஹாத்' என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல் என்ற பொருளும், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருளும் உள்ளது என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களை சென்ற இதழில் கண்டோம்.  மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய வசனங்களைக் காண்போம்.

உறுதி.

ஜிஹாத் என்பதற்கு உறுதி என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  அது சம்பந்தமான வசனங்களைக் காண்போம்.

"நாங்களும் உங்களைச் சேர்ந்தோரே' என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா? என்று நம்பிக்கை கொண்டோர் (மறுமையில் வியப்புடன்) கூறுவார்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. நஷ்டமடைந்தோரில் அவர்களும் ஆகி விட்டனர்.  (அல்குர்ஆன் 5:53)

"எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்'' என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன என (முஹம்மதே!) கூறுவீராக! அது நிகழும் போது அவர்கள் நம்ப மாட்டார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?  (அல்குர்ஆன் 6:109)

இறந்தோரை அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே உறுதியாக சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறில்லை! இது அவனது உண்மையான வாக்குறுதி. எனினும் அதிகமான மனிதர்கள் அறிய மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 16:38)

(முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்கின்றனர். "சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!  (அல்குர்ஆன் 24:53)

தங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தால் எந்த ஒரு சமுதாயத்தையும் விட தாங்கள் நேர் வழி பெற்றோர் ஆவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தார்கள். அவர்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்த போது அது அவர்களுக்கு வெறுப்பையும், பூமியில் பெருமையடிப்பதையும், கெட்ட சூழ்ச்சியையும் தவிர (வேறு எதையும்) அதிகமாக்கவில்லை. கெட்ட சூழ்ச்சி அதைச் செய்தோரையே சூழ்ந்து கொள்ளும். முன்னோர்களின் கதியைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காணமாட்டீர்! அல்லாஹ்வின் நடைமுறையில் எந்தத் திருப்பத்தையும் காண மாட்டீர்.     (அல்குர்ஆன் 35:42,43)

மேற்கண்ட வசனங்கள் அனைத்திலுமே "உறுதியாக'' என்ற பொருள்பட அல்லாஹ்வின் மீது செய்யப்பட்ட சத்தியத்தின் வலிமையைக் காட்டுவதற்கு "ஜஹத' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இடங்களிலெல்லாம் "ஜஹத' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்ற அர்த்தம் செய்தால் "அல்லாஹ்வின் மீது ஆயுதமேந்திப் போரிட்டு'' சத்தியம் செய்தார்கள் என்று விபரீதமான பொருளைத் தந்து விடும். (நவூதுபில்லாஹ்)  அது போல் முன்பு செய்யப்பட்ட உழைப்பு, கட்டாயப் படுத்துதல் போன்ற வார்த்தைகளும் இந்த இடத்திற்குப் பொருந்தாது.  எனவே இந்த வசனங்களின் மூலம் ஜிஹாத் என்பதற்கு "உறுதி' என்ற அர்த்தமும் உள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

அழைப்புப் பணியில் ஈடுபடுதல்.

"ஜிஹாத்' என்பதற்கு "அறப்போர்' என்ற பொருளடங்கிய வசனங்களையும், சத்தியத்தை எடுத்துரைத்து பிரச்சாரப் பணியில் ஈடுபடுவதும் அறப்போர் தான் என்பதற்கான குர்ஆன் வசனங்களையும் காண்போம்.

அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்! இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். (அல்குர்ஆன் 22:78)

இந்த வசனத்தின் மூலம் தஃவா - அழைப்புப் பணி செய்வதும் "ஜிஹாத்' தான் என்பதை தெளிவாக விளங்க முடியும். மேலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தப் பணி எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த வசனத்தின் மூலம் அறிய முடிகிறது.

அல்லாஹ்வுக்காக ஜிஹாத் - அறப்போர் செய்ய வேண்டும் என்று கூறும் இறைவன், அதை எவ்விதத்தில் செய்ய வேண்டும் என்பதையும் இந்த வசனத்தில் விளக்குகிறான். நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு சத்தியப் பிரச்சாரம் செய்ததையும், அந்த சத்தியத்தை அறிந்து கொண்டவர்கள் அறியாத மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையும், இதுவே அறப்போர் - ஜிஹாத் செய்யும் விதம் என்பதையும் இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக! (அல்குர்ஆன் 25:52)

இந்த வசனத்திலும் "போரிடுதல்' என்ற அர்த்தத்தில் "ஜிஹாத்' என்ற வார்த்தை இடம் பெறுகிறது. ஆனால் இந்த வசனம் "குர்ஆன் மூலம் போரிடுங்கள்'' என்று சொல்வதிலிருந்து, ஆயுதமேந்திப் போரிடுதல் என்று விளங்க முடியாது.

குர்ஆனைக் கொண்டு கடுமையாகப் போரிட வேண்டும் என்பதற்கு, குர்ஆனில் இறைவன் அருளியுள்ள சத்தியத்தைக் கொண்டு கடுமையான பிரச்சாரம் செய்வது என்பதே பொருள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

Saturday 16 July 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 01)

(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

ஜிஹாத் - இந்த சொல்லைக் கேட்டாலே ஒரு சாரார் வெறுப்பின் உச்சத்திற்குச் செல்வதையும் மற்றொரு சாரார் உணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்று விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, தங்களையும் தங்கள் சமுதாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் காண முடிகின்றது.

ஜிஹாதைப் பற்றி மேற்கண்ட இரு சாராரும் கொண்டுள்ள கருத்துக்கள் சரியானவை தாமா? இறுதி வேதமான திருமறைக் குர்ஆனும் இறுதித் தூதராகிய பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையும் ஜிஹாத் சம்பந்தமாக என்ன விளக்கமளிக்கின்றன?  ஓர் உண்மை முஸ்லிம் ஜிஹாத் பற்றி எப்படிப் புரிந்து நடக்க வேண்டும்? என்பதை விளக்குவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு தான் "ஜிஹாத் - ஓர் ஆய்வு'.

ஜிஹாத் பற்றிய இந்த ஆய்வில், முஸ்லிமல்லாதவர்களில் பலர் ஜிஹாதைப் பற்றி ஏன் வெறுக்கின்றார்கள்? அதற்கு அவர்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் என்ன? அவை சரியானவை தாமா? என்பதை அலசவிருக்கின்றோம்.  மேலும் முஸ்லீம்களிலேயே ஜிஹாதைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.  அவை யாவை?  குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எந்தக் கருத்து சரியானது? என்பதை நாம் இன்ஷா அல்லாஹ் காணவிருக்கின்றோம்.

இது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குச் செல்வதற்கு முன், முதலில் ஜிஹாத் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? ஆயுதமேந்திப் போரிடுவது தானா? அல்லது ஜிஹாத் என்பதற்கு வேறு பொருளும் உண்டா? என்பதைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் ஜிஹாத் என்ற பதம் பல்வேறு நல்ல அமல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றது.  "ஜஹத' என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது தான் "ஜிஹாத்' எனும் பதம். இதற்கு நேரடி அகராதிப் பொருள் உழைப்பது, பாடுபடுவது என்பதாகும்.  திருக்குர்ஆனின் பல இடங்களில் ஜிஹாத் ஃபீ ஸபீலில்லாஹ் என்று குறிப்பிடுவதன் நேரடி அர்த்தம் அல்லாஹ்வின் வழியில் உழைப்பது, பாடுபடுவது என்பதாகும்.

திருக்குர்ஆனில் ஜிஹாத் என்ற வார்த்தை பல இடங்களில் வெவ்வேறு அர்த்தம் தரக் கூடிய வகையில் இடம் பெற்றுள்ளதை இப்போது பார்ப்போம்.

உழைத்தல் - பாடுபடுதல்.

ஜிஹாத் என்பதற்கு உழைப்பது, பாடுபடுவது என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான்.  அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.(அல்குர்ஆன் 9:79)

மேற்கண்ட வசனத்தில் உள்ள "ஜுஹ்த' என்ற அரபுச் சொல்லுக்கு "உழைப்பு' என்ற பொருள் இடம் பெற்றுள்ளதைக் கவனிக்க வேண்டும்.  இந்த இடத்தில் ஜிஹாதுக்கு வழக்கத்தில் உள்ள அர்த்தத்தைக் கொடுத்தால், "தாராளமாக செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது ஜிஹாதை (போரை) தவிர எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறிக் கேலி செய்கின்றனர்'' என்ற தெளிவற்ற - அர்த்தமற்ற வாசகமாக ஆகி விடும்.  எனவே இதிலிருந்து ஜிஹாத் என்பதற்கு உழைப்பது என்ற பொருள் உள்ளதை அறிய முடிகின்றது.

உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.  (அல்குர்ஆன் 29:6)

மேற்கண்ட வசனத்திலும் உழைப்பவர் என்பதற்கு "ஜாஹத' என்ற வார்த்தையும், உழைக்கிறார் என்பதற்கு "ஜாஹிது' என்ற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது.

நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 29:69)

இந்த வசனத்திலும் "உழைப்போருக்கு' என்பதற்கு, "ஜாஹதூ' என்ற வார்த்தையே இடம் பெறுகின்றது.

மேற்கண்ட வசனங்கள் மூலம் "ஜிஹாத்' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுவது என்பது நேரடிப் பொருளல்ல!  உழைப்பது, பாடுபடுவது என்ற அர்த்தமும் உள்ளதை விளங்க முடிகின்றது.

வற்புறுத்துதல் - கட்டாயப்படுத்துதல்.

"ஜிஹாத்' என்பதற்கு வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  அது சம்பந்தமாக உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.  (அல்குர்ஆன் 29:8)

மேற்கண்ட வசனத்தில் "உன்னை வற்புறுத்தினால்' என்பதற்கு "ஜாஹதாக' என்ற வார்த்தை இடம் பெறுவதைக் கவனிக்க வேண்டும்.  இந்த இடத்தில் ஜாஹதாக என்பதற்கு உன்னை ஆயுதமேந்தினால், உன்னைப் போரிட்டால், உன்னை தியாகம் செய்தால், உன்னைப் பாடுபட்டால் என்ற அர்த்தம் கொடுத்தால் என்ன நிலை ஏற்படும்.  யாருக்காவது ஏதாவது விளங்குமா?  எனவே இந்த வசனத்தி-ருந்து ஜிஹாத் என்பதற்கு வற்புறுத்துதல் என்ற அர்த்தம் உள்ளதை விளங்க முடிகின்றது.

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.  (அல்குர்ஆன் 31:15)

இந்த வசனத்திலும் "உன்னைக் கட்டாயப்படுத்தினால்' என்பதற்கு "ஜாஹதாக' என்ற வார்த்தை இடம் பெறுவதைக் கவனிக்க வேண்டும்.  இந்த இடத்திலும் ஜிஹாத் என்பதற்கு மேற்சொன்ன ஏனைய பொருள்களைப் பயன்படுத்த முடியாது என்பதை எளிதாகப் புரிய முடிகின்றது.

எனவே இவ்விரு வசனங்களின் மூலம் "ஜிஹாத்' என்பதற்கு வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற அர்த்தமும் உள்ளதை விளங்க முடிகின்றது.

"ஜிஹாத்' என்பதற்கு மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய திருக்குர்ஆன் வசனங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

Thursday 14 July 2011

பிரவுன் ஷுகர் கடத்திய SDPI போராளிகள்(?)!



அரசியலை நமதாக்குவோம், தேசத்தைப் போதுவாக்குவோம் என்ற போலி வாக்குறுதிகளுடன் களமிறங்கியிருக்கும் SDPI யின் முக்கியப் பிரமுகர் செய்த கொலை செயல் கேரள முஸ்லிம்களிடையே மட்டுமின்றி காவல் துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய பிரவுன் ஷுகர் என்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருளைக் கடத்தி தேசத்தைப் பொதுவாக்கியுள்ள்ளார் SDPI யின் முக்கியப் பிரமுகர்.

கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகில் உள்ள பாரப்பட்டி என்னும் ஊரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கேரள போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் குறிப்பிட்ட அந்த இடத்தில் முகாமிட்டிருந்தது காவல்துறை. அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது SDPI முக்கியப் பிரமுகர் ஹாரிஸ் என்பவர் உள்ளிட்ட 4 பேர் அந்தக் காரில் இருந்தனர்.இவர்களின் காரை சோதனை செய்த போலீஸார் அந்த வாகனத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிரவுன் ஷுகர் என்னும் போதைப் பொருள்களை பாக்கெட் பாக்கெட்டுகளாக பறிமுதல் செய்தனர்.சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, இந்தக் குழுவிற்குத் தலைவனாக செயல்பட்ட ஹாரிஸ் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அதே காரில் தப்பி ஓடி விட்டார். ஹாரிஸை நோக்கி தேடுதல் வேட்டையை தொடர்ந்த காவல் துறையினர் ஹாரிஸ் தப்பிச் சென்ற காரினை மன்னார்க்காடு என்னும் இடத்தில் கண்டெடுத்தனர். அத்தோடு ஹாரிஸ் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர் கேரள காவல்துறையினர்.கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மொத்த மதிப்பு ரூபாய் 2 கோடி என மதிப்பிட்டுள்ளது கேரள காவல்துறை. தப்பியோடிய ஹாரிஸ் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிரப்புழா பகுதியில் SDPI யின் சார்பில் 18வது வார்டு உறுப்பினராக நின்றவர் இவர்.இஸ்லாமிய மார்க்கம், இசையை ஷைத்தானின் ஆயுதம் என்று சொல்லும் நேரத்தில் அதையெல்லாம் தூக்கி குப்பையில் எறிந்து விட்டு தங்கள் கட்சிக்கு அதிரடி இசைகளுடன் பாடல்களை உண்டாக்கி இசையை ஹலாலாக்கிய இவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தனர். அதுவும் தமிழகத்தில் மூலைக்கு மூலை, தெருவுக்கு தெரு முஸ்லிம் வேட்பாளரை ஆதரியுங்கள், முஸ்லிம் வேட்பாளருக்கு மட்டும் வாக்களியுங்கள், இஸ்லாமிய ஆட்சி அமைய கரம் கொடுங்கள் என்று சொல்லி விட்டு கேரளத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?கேரள மாநிலம் ஆலுவா என்ற தொகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தத் தொகுதியில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்றவை இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்திய நேரத்தில், அரசியலை நமதாக்குவோம் கோஷம் போட்ட இந்த போலிகள் மட்டும் ராய் அரக்கல் என்ற கிறித்தவ வேட்பாளரை தங்கள் கட்சியின் சார்பாக நிறுத்தி தங்களின் போலி முகத்தை வெளிப்படுத்தினர்.ஒவ்வொரு இடத்திலும் இவர்கள் செய்யும் அடாவடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டு இருக்கும் நேரத்தில், கேரளாவில் பிரவுன் ஷுகர் கடத்திய ஹாரிஸ் என்னும் SDPI யின் முக்கியப் பிரமுகரால் இவர்களின் செல்வாக்கு இப்போது சரிய ஆரம்பித்துள்ளது.இவர்களின் போலி முகமூடிகளை தமிழகத்தில் இருக்கும் இவர்களின் தொண்டர்கள் புரிந்து கொண்டு இவர்களை தமிழகத்திலிருந்து அறவே அப்புறப்படுத்தினால் தான் இஸ்லாமியர்களின் மீது மாற்று மத சகோதரர்களுக்கு இருக்கு கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எஞ்சியிருக்கும் என்பது நிதர்சனம்.    நன்றி : உணர்வு ஜூலை 15 - 21

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More