Sunday, 7 August 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 04) நீதிக்குக் குரல் கொடுப்போம்.


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 04)
நீதிக்குக் குரல் கொடுப்போம்.

(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

"ஜிஹாத்”என்பதற்கு உழைத்தல்,பாடுபடுதல்,வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி மற்றும் சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி ஆகிய அர்த்தங்கள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் சான்றுகளுடன் இதுவரை பார்த்தோம். 

மேலும் என்னென்ன நற்செயல்களுக்கு "ஜிஹாத்' என்ற வார்த்தை பொருந்தும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஹஜ் செய்வதும் ஜிஹாத்

அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?'' என்று நான் கேட்டேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் ஆகும்'' என்றார்கள்.  நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),  நூல் : புகாரி 1861, 1520, 2784

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸின் மூலம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்படும் ஹஜ்ஜை நிறைவேற்றுவது சிறந்த ஜிஹாத் என்பதை விளங்க முடிகிறது.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் ஜிஹாத்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார்.  நபி (ஸல்) அவர்கள், "உன் தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றார்களா?'' என்று கேட்டார்கள்.  அதற்கு அம்மனிதர், "ஆம்'' என்று பதிலளித்தார்.  "அப்படியென்றால் அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),  நூல் : புகாரி 3004,5972

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை ஜிஹாத் என்ற வார்த்தையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நியாயத்திற்காக நாவினால் குரல் கொடுப்பதும் ஜிஹாத்.

ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. "ஜிஹாதில் சிறந்தது எது?'' என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),  நூல் : நஸயீ 4138


நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜிஹாதில் சிறந்தது எது?'' என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),  நூல் : அஹ்மத் 18074

"ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : அபூதாவூத் 3781

மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் ஆட்சியாளர்களின் தவறுகளையும், அவர்களின் நியாயமற்ற போக்குகளையும் சுட்டிக்காட்டி நாவினாலும், எழுத்துக்களினாலும் தைரியமாக எதிர்ப்பதும் ஜிஹாத் தான் என்பதையும், மேலும் அது தான் சிறந்த ஜிஹாத் என்பதையும் விளங்க முடியும்.

எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை.  அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள்.  அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.  அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள்.  தாம் செய்யாதவற்றை அவர்கள் சொல்வார்கள்.  தமக்குக் கட்டளையிடப் படாதவற்றைச் செய்வார்கள்.  ஆகவே யார் இவர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார்.  யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் ஆவார்.  யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் தாம்.  இவற்றுக்கப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : முஸ்லிம் - 71

மேற்கண்ட ஹதீஸ் முஃமின்களின் பண்பைப் பற்றிக் கூறும்போது கை, நாவு, உள்ளம் ஆகிய மூன்று வழிகளிலும் தீமைக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை ஜிஹாத் என்று குறிப்பிடுகின்றது.

உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் உங்களுடைய பொருட்களாலும் ஜிஹாத் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),  நூல் : நஸயீ 3141

மேற்கண்ட ஹதீஸ் கை, நாவு, பொருளாதார உதவி ஆகிய மூன்று வழிகளில் தீமைக்கெதிராக போர் புரிவதையும் ஜிஹாத் என்று தான் சொல்கிறது.

இதன்மூலம் அநீதி, அக்கிரமம் போன்ற எத்தகைய தீமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் ஜிஹாத் தான் என்பதைத் தெளிவாக விளங்க முடிகிறது.

மனதைக் கட்டுப்படுத்துவதும் ஜிஹாத்.

தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிட்டவனே போராளியாவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபுழாலத் பின் உபைத் (ரலி),  நூல் : திர்மிதி 1546

மேற்கண்ட ஹதீஸ் மூலம் தீய எண்ணங்களைக் கொண்டு நம்மை வழிகெடுத்து, இறைவனுக்கு மாறு செய்யக்கூடிய செயல்களை செய்விக்கத் தூண்டும் நமது மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவதும் "ஜிஹாத்' தான் என்பதை விளங்க முடிகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More