Sunday, 7 August 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 05) செல்வத்தால் போரிடுதல்.


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 05)
செல்வத்தால் போரிடுதல்.


(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

இறைவனால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது, மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவது, நீதிக்காக (நாவினால்) குரல் கொடுப்பது ஆகிய நற்செயல்கள் அனைத்தும் "ஜிஹாத்' என்பதை ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களின் மூலம் சென்ற தொடரில் நாம் பார்த்தோம்.

இவை அல்லாமல் நேரடியாகக் களப் போரில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வதும், அந்த யுத்தத்திற்குத் தேவையான தளவாடங்களுக்காக தங்களிடமுள்ள செல்வங்களைச் செலவிடுவதும் "ஜிஹாத்' (அறப்போர்) தான் என்பதை விளக்கும் ஒரு சில வசனங்களை உதாரணத்திற்குக் காண்போம்.

நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்கள் மற்றும் உயிர்களால் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும் அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 4:95)

(படைபலம்) குறைவாக இருந்த போதும், அதிகமாக இருந்த போதும் புறப்படுங்கள்! உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்!  நீங்கள் அறிந்தால் இது உங்களுக்குச் சிறந்தது.  (அல்குர்ஆன் 9:41)

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோர் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போருக்குச் செல்லாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்க மாட்டார்கள். (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன்.  (அல்குர்ஆன் 9:44)

அல்லாஹ்வின் தூதர் (முஹம்மத், தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். "கோடையில் புறப்படாதீர்கள்!'' எனவும் அவர்கள் கூறுகின்றனர். "நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது'' என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?  (அல்குர்ஆன்9:81)

இத்தூதரும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடுகின்றனர். அவர்களுக்கே நன்மைகள் உண்டு. அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்9:88)

நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்ப வேண்டும்; அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அறப்போர் புரிய வேண்டும்; நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது.  (அல்குர்ஆன் 61:11)

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்.  (அல்குர்ஆன் 49:15)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தும், பொருட்களைக் கொண்டும், உயிர்களைக் கொண்டும் இறைவழியில் போரிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு, அவ்வாறு போரிடுவது "ஜிஹாத்' என்றும் கூறுகின்றன.

இந்த வசனங்களில் கூறப்படும் பொருட்கள் - செல்வங்கள் என்பது, போர்க்களத்தின் தேவைக்காக - அதாவது வாகனங்கள், போர்க்கருவிகள், உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக செலவாகும் தொகையைக் குறிக்கக் கூடியது.

ஒரு நாட்டின் அரசாங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட முறையான இராணுவம், இராணுவப் பயிற்சி மையம், இராணுவத் தளவாடங்கள், பாதுகாப்பு அமைச்சகம், இராணுவம் அல்லது பாதுகாப்புத் துறைக்கான முறையான கட்டமைப்பு, அதற்கான செலவினங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும் முறை ஆகியவை இப்போது உள்ளது போல் அக்காலத்தில் கிடையாது.

பெருமானார் (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று, ஜிஹாத் (யுத்தம்) செய்ய முன் வந்தவர்கள் மூன்று வகையினராக இருந்தனர்.  முதல் வகையினர் - யுத்தக் களம் சென்று நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்குத் தேவையான உடல் வலிமையுடன் குதிரைகள், ஒட்டகம், போர்க் கருவிகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான உணவு போன்ற தேவைகளை சுயமாகப் பெற்றிருந்தவர்கள் அல்லது அவற்றைப் பெறுவதற்கான பொருளாதார வசதியைப் பெற்றிருந்தவர்கள்.  இரண்டாவது வகையினர் - போரில் ஈடுபடுவதற்கான உடல் வ-மையை மட்டும் பெற்றிருந்தவர்கள்.

மூன்றாவது வகையினர் - பொருளாதார வசதியை மட்டும் பெற்று, போரில் நேரடியாக ஈடுபடுவதற்கான ஆற்றலைப் பெறாதவர்கள்.  இந்த வகையினர் தங்களிடமிருந்த பொருளாதாரத்தைக் கொண்டு, இரண்டாவது வகையினருக்குத் தேவையான போர் செலவினங்களைச் செய்தனர்.  இந்த முறையில் தான் அக்கால முஸ்லிம்கள் போர் முனைகளைச் சந்தித்தனர்.

இதை ஆர்வமூட்டுகின்ற வகையில் தான் மேற்கண்ட வசனங்கள் அனைத்தும், "பொருட்களாலும், உயிர்களாலும், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (யுத்தம்) செய்யுங்கள்'' என்று இரண்டு வகை நற்செயல்களையும் ஒன்று சேர்த்து, அந்த இரு வழிகளுமே "ஜிஹாத்' தான் என்று கூறுகின்றன.

நாம் இது வரை பார்த்த திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஆயுதமேந்திப் போரிட்டு எதிரிகளை வெட்டுவது, கொல்வது போன்ற செயல்கள் மட்டுமே ஜிஹாத் அல்ல என்பதையும், மாறாக அது மேலும் பல நற்செயல்களைக் குறிக்கக் கூடிய ஒரு பொதுவான சொல் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.    

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More